அறுவை பூமியில் அன்பு பாலம் - சுப்புலெட்சுமி ஜபிஎஸ் ஆக்ஷன் கல..கல...

அருவா வீச்சும், தெறிக்கும் ரத்தமும் நிறைந்த திக்.திக். ஊருக்கு இடம் மாற்றம் என்றாலே துணிச்சலான காக்கிச் சட்டைகளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் வியர்க்கத்தான் செய்யும். 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய பூமியில், காவல் உயரதிகாரி சுப்புலெட்சுமி ஐ.பி.எஸ். அன்பு ஆயுதத்தைத் தூக்கியபடி அமைதி பூங்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று பாராட்டு மழை பொழிகிறார்கள் பொதுமக்கள். 
சென்னை காவல்துறையில், நிர்வாக வசதிக்காக வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என பிரிக்கப்பட்டு, நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ஐபிஎஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அவர்களின் மேற்பார்வையில், அவர்களை விட சில வருடங்கள் குறைவாக அனுபவம் கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள், டெபுடி கமிஷனராக (துணை ஆணையர்) பணியில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தென் சென்னையிலோ, மத்திய சென்னையிலோ பணியிட மாற்றம் என்றால், துள்ளல் போட்டுக் கொண்டு உயரதிகாரிகள் முதல் ஏட்டு வரை மகிழ்ச்சியாக செல்வார்கள். ஆனால், வடசென்னையில் பணி என்றால், பலருக்கு கிலி பிடித்துவிடும். நடிகர் தனுஷ் நடித்த "வடசென்னை", நடிகர் கார்த்தி நடித்த "மெட்ராஸ்" படம் போல இல்லை என்றாலும், எந்தநேரம் கத்திகள் பறக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் வடசென்னையின் ஜாதகம் இருக்கும். துணிச்சலான அதிகாரிகளுக்கே தண்ணி காட்டும் ரத்த பூமியில், புயலைப் போல அமர்ந்து ஆயுத கலாச்சாரத்தை தனது அன்பு பாலத்தால் அடக்கிக் கொண்டிருக்கிறார் சுப்புலெட்சுமி ஐபிஎஸ்
அதிகாரம் கைகொடுக்காத இடங்களில் எல்லாம் கூட அன்பும், ஆதரவுகரமும் அட்டகாசமான, அசத்தலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை, துணை ஆணையரின் துணிச்சலான நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளதாக நிம்மதி பெருமூச்சுவிடுகின்றனர், வடசென்னை வாசிகள்.
"நாள்தோறும் மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள இடங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வடசென்னையில் உள்ள எங்கள் வீட்டுக்கு திரும்பும் போது திக்..திக்.. என்று இருக்கும். எந்த சந்தில் இருந்து ரவுடிகள் அரிவாள்களை வீசுவார்கள் என்ற பயத்திலேயே வீட்டை நோக்கி பேச்சு, மூச்சு இல்லாமல் தத்தி தத்தி நடை போடுவோம். அந்த நேரங்களில் எல்லாம் போலீஸ் ரோந்து வேனை கண்டால், கடவுளையே நேரில் கண்டதைப் போல நிம்மதியாக இருக்கும். புதுவண்ணாரப்பேட்டைக்கு டெபுடி கமிஷனராக துணிச்சலான அதிகாரிகள் நியமிக்கும் போதுதான், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ரவுடிகள் தங்கள் வாலை சுருட்டிக் கொள்வார்கள். இப்படிபட்ட நேரத்தில் பெண் அதிகாரி எங்களுக்கு உயரதிகாரியாக வந்துள்ளார் என்ற செய்தி கிடைத்தபோதே, அச்சவுணர்வு ஏற்பட்டது. இந்த ரவுடி பசங்க, அந்தம்மாவை என்ன பாடுபடுத்தப் போறாங்களோ என பயப்பட்டோம். ஆனால், பதவியேத்த முதல்நாளில் இருந்தே, அதிகாரத்தை கையில் எடுக்காமல், மனித வாழ்விற்கே மகத்துவமான அன்பு எனும் குணத்தை கையில் எடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, அமைதி பூங்காவாக வடசென்னையை மாற்றி வருகிறார். எந்த நேரமும் பெண் குழந்தைகள் பயமின்றி வெளியே போகலாம் என்றளவுக்கு வடசென்னை புத்தம் புதிய பூமியாக மாறியிருக்கிறது. 
பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஆரம்பத்திலயே கிள்ளி எறிவதில் குறியாக இருக்கும் டெபுடி கமிஷனர் சுப்புலெட்சுமி, பொதுமக்களின் குறைகளை களைவதில் காட்டும் அக்கறைப்யை போலவே காவல் துறையில் பணிபுரிவோரிடமும் நேசம் காட்டுகிறார். விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் மட்டுமின்றி, ஆட்டோகாரர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் செயல்படுவது, வடசென்னை மக்களுக்கு புதிய அனுபவம். 
காவல்துறையினர் பொதுமக்களின் நண்பர்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரவேண்டும் என்பதற்காக, டெபுடி கமிஷனராக பதவியேற்றவுடனே, தனது சரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் உள்பட உதவி ஆணையர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவு வழங்கி, ஒரு குடையின் கீழ்தான் நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுகிறோம் என்ற சகோதர உணர்வை ஏற்படுத்தினார். முதலடியே மனிதாபிமானத்துடன் தொடங்கிய டெபுடி கமிஷனர் சுப்புலெட்சுமி, அடுத்தடுத்தும் களத்தில் இறங்கி அதிரடி காட்டியதுதான், காவல்துறையினரை மட்டுமின்றி விளிம்பு நிலையில் மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏழை எளிய குடும்பத்தினரை தானே தேடிச் சென்று அவர்களை குறைகளை கேட்டறிந்ததுடன், அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான புத்தாடைகள், பாடப்புத்தகங்கள் வழங்கி, தடைப்பட்டுக் கிடந்த கல்விக் கண்ணையும் திறந்து வைத்ததார். 
தீபாவளி திருநாளையொட்டி, ஏழைக் குழந்தைகளும் பண்டிகை கொண்டாட்டத்தில் மேல்தட்டு மக்களுக்கு இணையாக, மகிழ்ச்சி மத்தாப்புகளை கொளுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன், அவர்களுடன் பட்டாசுகளை வெடித்து, உங்களில் ஒருவர்தான் நான் என்பதை புரிய வைத்ததார். அதேபோல, தீபாவளிக்கு முதல்நாள், தங்கள் குடும்பத்துப் பிள்ளைகளின் தீபாவளி சந்தோஷத்தை நிறைவேற்ற இரவு முழுவதும் கண்விழித்து ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த, கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். சென்னை காவல் துறையிலேயே புதுமையான வகையில் சிந்தித்து செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வரும் டெபுடி கமிஷனர் சுப்புலெட்சுமியின் மனிதநேய தொண்டிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக களத்திற்கு வந்து தீபாவளி வெகுமதிகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். 
காவல்துறையினரின் பணி என்பது கண்டிப்புடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மட்டுமல்ல, பொதுமக்களுக்கு குறிப்பாக விளிம்பு நிலை மனிதர்கள் வரை மரியாதை வழங்குவதும், அவர்களுக்கு பாதுகாப்பு அரணும் கூட என்பதை தனது செயல்களால் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார் டெபுடி கமிஷனர் சுப்புலெட்சுமி. அதேபோல, விளையாட்டுகளில் ஆர்வம் உள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் முனைப்பு காட்டுகிறார். இதையெல்லாம் விட முத்தாய்பபாக, காவல் துறையினரையும், பொதுமக்களையும் குடும்பம் போல பாவிப்பதிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறார் டெபுடி கமிஷனர். தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஸ்ரீதேவி, புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அக்டோபர் மாதம் 11ம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவில் மிகுந்த துயரடைந்த டெபுடி கமிஷனர் சுப்புலெட்சுமி, கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தியதுடன், அவரது உடலையும் சுமந்துகொண்டு, இடுகாடு வரை சென்றது, ஸ்ரீதேவியின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்ல, காவல் துறை குடும்பத்தினர், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.